கலாசார மூலதனம், சமூக மூலதனம், பொருளாதார மூலதனம் (Capitals of Education)

கல்வியின் மூலதனங்கள் (Capitals of Education)

மூலதனம் என்பது பணத்தால் மாத்திரம் மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. இது அன்னியோன்னிய இடைத்தொடர்பு, சமூக வலையமைப்பு, மதிப்பு, பெறுமானம் போன்றவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட எண்ணக்கருவாகும். பொதுவாக மூலதனமானது பொருளாதார மூலதனம், சமூக மூலதனம், கலாசார மூலதனம் என்ற வகைகளில் பாகுபடுத்தப்படுகின்றது. பொருளாதார மூலதனம் என்பது முழுமையான வருமானத்தை குறிக்கும். சமூக மூலதனம் என்பது தனியாளிடம் காணப்படும் சமூக தொடர்பு சார்ந்த வலையமைப்பைக் குறிக்கும். கலாசார மூலதனம் என்பது குறியிட்டு பெறுமதியாகிய நற்பண்புகள், அறிவு, மதிப்பு போன்றவற்றைக் குறிக்கும்.

மூலதனம் என்பது ஒரு நிறுவனத்தின் மீது, ஒரு பிரதேசத்தின் மீது, ஒரு நாட்டின் மீது செல்வாக்கு செலுத்தும் விடயம் ஆகும். பொருளாதார, அரசியல், சமூக செயற்பாடுகளை யதார்த்த ரீதியாக புரிந்து கொள்வதற்கு உதவிய ஒரு நூலாக கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ எனும் நூல் காணப்படுகின்றது. பொருளாதார மூலதனத்தை முதன்மைப்படுத்தியே ஏனைய மானிட செயற்பாடுகள் தீர்மானிக்கப்படுவதாக மார்க்சிய கோட்பாடு கூறுகின்றது. எனினும் பொருளாதார காரணியில் மாத்திரம் ஒரு தனிநபரால் அடையப்பட வேண்டிய அனைத்தும் அடங்கி இருக்கவில்லை என 1992 இல் சமூக மூலதனம் என்னும் எண்ணக்கருவை பிரசித்திப்படுத்திய ரொபேட் புட்டினம் என்னும் அமெரிக்க சமூக விஞ்ஞானி குறிப்பிடுகின்றார். 

சமூக மூலதனம்

ஒரு தனியாள் ஏதாவது பொருளாதார அல்லது வர்த்தக செயற்பாடுகளுக்காக மேற்கொள்ளும் முதலீடு அல்லது அர்ப்பணிப்புக்கு கிடைக்கும் பிரதிபலன் மூலதனத்தின் வயப்பட்டதாக அமையும். அந்த அடிப்படையில் சமூக மூலதனம் அதே போன்றதொரு விலைதிறன்மிகு முதலீடாகும். சமூக மூலதனம் அன்னியோன்னிய நம்பிக்கை ஊடாகவும் புரிந்துணர்வினூடாகவும் தனியாட்களிடையே கட்டியெழுப்பப்படும் ஒரு ஒன்றிணைந்த சக்தியாகும். இந்த ஒன்றிணைந்த சக்தி வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளைத்திறன் மிக்கதாக அமையும்.

ஆளிடைத் தொடர்புகள் மற்றும் அன்னியோன்னிய அடிப்படைகளில் கட்டியெழுப்பப்படும் நம்பிக்கைகளின் ஊடாக சமூகத்தினுள் ஒரு தனியாளினால் தனியாக அடைய முடியாது எனக் கருதப்படும் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் அடையக் கூடியதாக இருக்கும். தனியாட்கள் சமுதாய அடிப்படைகளில் கட்டியெழுப்பப்படும் நம்பிக்கைகள், ஒழுக்கம் மற்றும் ஆளிடைத் தொடர்புகளின் ஊடாக பொருளாதார மற்றும் சமுதாய நன்மைகளையும் பெற முடிகிறது என்பதை நிரூபிப்பதற்காக ஆய்வாளர்கள் பல்வேறு விதமான ஆய்வுகளின் ஊடாக முயற்சிக்கின்றனர்.

சமூக குழுக்கள் ஆரம்பமாகிய தினத்தில் இருந்து சமூக மூலதனம் ஆரம்பமாகிவிட்டதாக சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மனிதன் தெரிந்தோ தெரியாமலோ சமூக மூலதனத்துக்குரிய வளங்களை சேகரிப்பதற்கு தொன்நெடுங் காலத்திலிருந்தே ஊக்கல் பெற்றிருந்தான். சமூக மூலதனம் ஒரு பிள்ளையின் தற்கால மற்றும் எதிர்கால இருப்பில் பங்களிப்பு செய்யும் குடும்ப ஒழுங்கமைப்புக்குரிய வளமாக கருதக்கூடியது என ஹோல்மன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தனிநபர் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு கல்வி செயன்முறையிலும் சமூக மூலதனம் தொடர்புபடுத்தப்படுகின்றது. தொன்மைச் சமூகத்தில் அவை குடும்பத்தில் இருந்து முறைசாரா வகையிலும், முறையில் வகையிலும் பெற்றுக் கொள்ளப்பட்டது. தற்கால சமூகத்தில் பாடசாலைகளில் அல்லது வேறு கல்வி நிறுவனங்களில் முறைசார்ந்த அடிப்படையில் சமூக மூலதனத்தை பெற்றுக்கொள்ள கூடிய வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஒரு மாணவனுக்கு பாடசாலைக்கு வெளியே அவனது குடும்பம் மற்றும் சமூகத்தில் அவனுக்கு உரித்தாகவுள்ள சமூக வளத்தின் அளவு அவனது சமூக மூலதனமாக இனங்காணத்தக்கதாக உள்ளது. இதில் அவனது பெற்றோர், கல்வி தொடர்பில் வெளிப்படுத்தும் மனப்பாங்கு அவனது பெற்றோர் தவிர்ந்த ஏனையோரின் இடைத்தொடர்பு போன்றவை கவனத்தில் கொள்ளப்படும். பெற்றோரின் சமூக மூலதனம் பிள்ளைக்கு கடத்தப்படுகிறது. கல்வியினாலேயே இவ்வாறான நிலைமை ஏற்படுகின்றது.

 

ஒரு பிள்ளை குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் மற்றும் திறந்த சமூகத்தின் வேறு அங்கத்தவர்களுடன் கொள்ளும் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையின் ஊடாக அவனது அறிவு, அனுபவம், சமூக ஆற்றல் என்பன விருத்தி பெறும். பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்கேற்கும் மாணவர்களின் சமூக மூலதனம் விருத்தியடைந்த அதேவேளை அவர்களது அறிவு மட்டமும் விருத்தி பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலையே சமூக மூலதனத்தை விருத்தி செய்யும் இடமாக காணப்படுகின்றது. மாணவர்கள், ஆசிரியர்கள் மீது கொள்ளும் நம்பிக்கை அதிகரிக்கும் போது அவர்கள் கற்றலில் ஊக்களுடன் செயற்படும் சந்தர்ப்பங்களும் அதிகரிக்கின்றன. ஒரு பாடசாலை ஆசிரியர் வெற்றிகரமாக திட்டமிட்டு செயற்படுவாரானால் மாணவர்களின் சமூக மூலதனத்தை மிக இலகுவாக கட்டியெழுப்பலாம். இவ்வாறு கல்வியால் கட்டியெழுப்பப்படும் சமூக மூலதனம் பேண்தகு அபிவிருத்திக்கு உதவுவதை அவதானிக்க முடியும். 

கலாசார மூலதனம்

கலாசார மூலதனம் என்பது பெரும்பாலும் ஒருவரிடம் அவரது குடும்பத்தால் உருவாக்கப்பட வேண்டிய குறியீடு சார்ந்த வளமாகும். நடைமுறையில் இக்குறியீடு சார்ந்த வளத்தை கட்டியெழுப்ப வேண்டிய வகிபாகத்தை பாடசாலை ஏற்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. ஒரு தனியாளின் நிதி மற்றும் சமூக மூலதனத்துக்கு பங்களிப்பு செய்யும் கலாசார அறிவே கலாசார மூலதனம் என நேற னுiஉவழையெசல ழுக வாந ர்ளைவழசல ழுக ஐனநயள (2005)  என்னும் அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பான கலாசார நம்பிக்கை, சம்பிரதாயங்கள், நடத்தை போன்றவை கலாசார மூலதனத்தினுள் அடங்கும் என பியரே போதியோ என்பவர் குறிப்பிடுகின்றார்.  அத்துடன் கலாசார மூலதனம் வாழ்க்கையின் வெற்றிக்கும் வழிவகுக்கும் எனவும் குறிப்பிடுகின்றார். கலாசார மூலதனம் என்னும் விடயத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் பியரே போதியோ மற்றும் ஜீன் கிளவுட் பெசரன் ஆகியோர் ஆவார். இருவரினாலும் 1960 களில் பிரான்ஸின் கல்வி நிலையில் மாற்றங்களை தெளிவுபடுத்துவதற்கு முயற்சிக்கும்போது உருவாகியதே இந்த எண்ணக்கருவாகும். பின்னர் இந்த எண்ணக்கரு விபரிக்கப்படும் போது சமூகத்தொடர்பு, பல்வேறு பொருட்கள், சமூகவலு மற்றும் சமூக நிலை போன்ற எண்ணகருக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது என போதியோ குறிப்பிட்டுள்ளார்.

நேர்த்தியான ஆடைகளை அணிதல், கண்ணியமான முறையில் தலைமுடி வெட்டுதல்,  முறைப்படி பாதணிகளை அணிதல், பாடசாலைகளின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் கழுத்துப்பட்டிகளை அணிதல், கௌரவமான வகையிலான மொழிநடையைக் கொண்டிருத்தல், உணவு மேசையில் நாகரிகமாக நடந்து கொள்ளுதல், விழுமிய பண்புகளை கடைப்பிடித்தல் என்பன கலாசார மூலதனமாக கொள்ள முடியும். அத்துடன் சமூகத்தின் உயர் நிலைக்குக் காரணமான அறிவு, மனப்பாங்கு, விழுமியம், மொழி, நம்பிக்கையும் பாதுகாப்பும், சமூகம் தொடர்பான புலக்காட்சி என்பன சமூக மூலதனமாகவே கொள்ளப்படும் என போதியோ குறிப்பிட்டுள்ளார்.

கலாசார மூலதனம் cultural capital

ஒரு தனியாளின் மதிப்பு நிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார மூலதனம் குடும்பத்திலும் அது தொடர்பான பின்புலத்திலுமே உருவாக்கப்பட வேண்டியதாகும். குடும்பத்தின் பின்புறத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ள கலாசார மூலதனம் பிள்ளைகளின் கல்வியில் செல்வாக்கு செலுத்தும் அதேவேளையில் கல்விச் செயன்முறையில் எந்தவொரு சமூகத்தினதும் கலாசார மூலதனத்தையும் உள்வாங்கிக் கொள்ளக்கூடிய தன்மையும் காணப்படுகின்றது.

கல்வியில் வெற்றி அடைய கலாசார மூலதனத்தை பயன்படுத்த மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்தல் வேண்டுமென போதியோ குறிப்பிட்டுள்ளார். அவையாவன:

  1. பெற்றோருக்கு கலாசார மூலதனம் இருத்தல் வேண்டும்.
  2. அவர்கள் தமது பிள்ளைகளுக்கு அவற்றை ஒப்படைத்தல் வேண்டும்.
  3. பிள்ளைகள் அவற்றை உள்வாங்கித் தமது கல்வி அபிவிருத்திக்குப் பயன்படுத்துதல் வேண்டும்.

டென்மார்க்கில் மாணவர்களை இடைநிலை பாடசாலைகளுக்கு உள்வாங்கும்போது இந்த மூன்று விடயங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது. பிரித்தானியாவில் குடும்பப் பின்புலம் தொடர்பான கலாசார காரணிகள் பிள்ளைகளின் கல்வியில் தொடர்புபடும் தன்மை தொடர்பில் ஆய்வுசெய்த ஹல்சி, ஹீத், ரிஜ் ஆகியோர் குடும்பத்தின் கலாசார காரணிகளை மதிப்பிடுவதற்கு பெற்றோரின் கல்வியறிவு, அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி தொடர்பில் வெளிப்படுத்தும் மனப்பாங்கு, பௌதீகக் காரணிகள், குடும்ப வருமானம் போன்றவற்றை பயன்படுத்தினர். இதற்கேற்ப பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் அவை தொடர்பான காரணிகள் அனைத்தும் பங்களிப்பு செய்வதை உறுதிப்படுத்தியுள்ளனர். விசேடமாக பிள்ளையின் கல்விக்காக பாடசாலை வகைகளைத் தெரிவு செய்வதிலும் பாடசாலையில் பிரவேசிப்பதற்கும் கலாசார மூலதனம் காரணமாவதை கண்டறிந்துள்ளனர்.

சிறந்த கலாசார மூலதனத்தை கொண்ட பிள்ளைகள் ஆசிரியர்களுடன் மிகுந்த இடைத்தொடர்பினைக் கொண்டவர்களாக உள்ளனர் என வைல்ட் ஹேன் தனது ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளார். மாணவர்களின் கலாசார மூலதனம், கலை கலாசாரச் செயற்பாடுகளின் அடைவு மட்டத்தில் உடன்பாடான செல்வாக்கை செலுத்தியதுடன் அவர்களின் எதிர்கால செயலடைவுகள் தொடர்பான எதிர்பார்ப்பிலும் கூடிய செல்வாக்கு செலுத்தியிருந்ததாக இத்தாலியில் “இடைநிலைப் பாடசாலைகளில் கல்விக் கொள்கைகளின் சீர்திருத்தமும், கலாசார மூலதனமும்”; என்ற தலைப்பில் ஆய்வு செய்த போல்சல்  தெரிவித்துள்ளார்.

கலாசார விழுமியங்களை பொறுத்தமட்டில் எமது நாடும் அது அமைந்துள்ள ஆசிய பிராந்திய நாடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்றி வருகின்ற நிலை காணப்படுகின்றது. சமய, கலாசாரங்களில் வேர்விட்டு நன்கு செழித்து வளர்ந்த மகத்தான நாகரிகங்கள் இந்த விழுமியங்களை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியுள்ளன.

ஏனைய மனிதர்கள் மீதான அன்பும் இரக்கமும், உண்மையும் நியாயமும், நீதியும் நேர்மையும், அறமும் உதவி வழங்கலும் ஆகிய இந்த விழுமியங்கள் ஆழ வேரூன்றி நிற்கின்றன. அறவொழுக்கம், ஆன்மீக விழுமியங்களும் ஒருவரது சொந்த மதம் மற்றும் கலாசாரத்தில் இருந்தே முதன்மையாக பெற்றுக் கொள்ளப்படுகின்றது எனினும் “விழுமியங்கள் கற்பிக்கப்படுவதில்லை பற்றிப் பிடித்துக் கொள்ளப்படுகின்றன”  என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. எனவேதான் கலைத்திட்டத்தில் உள்ள சகல பாட நெறிகளிலும் சகல மட்டங்களிலும் விழுமியங்கள் உள்ளடங்கியுள்ளன.

எதிர்காலத்தில் நாம் செழுமைப்படுத்தி சமூகத்தில் பதிக்க வேண்டிய பல விழுமியங்கள் இருக்கவே செய்கின்றன. திருப்தி நிறைந்த எளிய வாழ்க்கை, அதிகார ஆசைகளை நீக்கிவிடுதல், தனது வருமானத்திற்குள் வாழ்ந்து அதில் திருப்தி அடைதல், வளங்களை அளவாக பயன்படுத்துதல் போன்றன இன்று விருத்தி செய்ய வேண்டிய விழுமியங்களுள் சிலவாகும். இவை கல்வியினாலேயே வழங்கப்படுகின்றது. இவை அனைத்தும் நிலைபேறான அபிவிருத்திக்கு துணை புரிவதை மறுப்பதற்கில்லை.

பொருளாதார மூலதனம்

பொருளாதாரம் என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதார காரணிகளையும் கொண்டுள்ளது. பொருளாதாரம் என்பது அதன் தொழிநுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக்கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கிய காரணிகளாக உள்ளடக்கியுள்ளது. நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய மாறுநிலைக் கூறுகள் ஆகும். மேலும் அவை சந்தை சமநிலையை தீர்மானிக்கின்றன.

பொருளாதார மூலதனம்
 

நிலையான அபிவிருத்திக்காக கல்வி என்ற எண்ணக்கருவை கற்கும்போது பிரதான மூன்று வலுத்தூண்கள் உள்ளன. அதில் ஒன்று பொருளாதாரமாகும். பொருளாதாரம் தொடர்பாக தெளிவுபடுத்துகையில் மேற்படி எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தும் போது அது பொருளாதாரத்தில் எவ்வாறான செயல்விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். கோள ரீதியாக நோக்குமிடத்து இவ் எண்ணக்கரு வறுமையை இல்லாதொழிப்பதற்கும், கூட்டாக பொறுப்புக் கூறுவதற்கும், வகைகூறுவதற்கும் சந்தை பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கும் பங்கு கொள்ளுதல் வேண்டும். இவை அனைத்தும் நடைமுறைப்படுத்துகின்ற போது நிலையான அபிவிருத்திக்கான ஏனைய வலுத்தூண்களின் தாக்கங்களையும் சிந்தித்தல் வேண்டும். சந்தைப் பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்றபோது அதனால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகள் அதிகமாயின் அது நிலையான அபிவிருத்தி செயற்பாட்டுக்கு தடையாகும்.

ஒரு நாட்டில் காணப்படும் நிலம், உழைப்பு, மனித வளம், மூலதனம் இவற்றை உற்பத்திக் காரணிகள் எனக்கூற முடியும். இவற்றில் மனிதவளத்தை எடுத்துக் கொண்டால் மனிதவள விருத்தி ஏற்பட்டிருக்காவிடின் உலகின் பல்வேறு கண்டுபிடிப்புகள் சாத்தியமற்றதே. உதாரணமாக, கல்விரீதியான அறிவு விருத்தியால் மனிதன் முன்னேற்றமடைந்து கணினி தொழிநுட்பம் ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது வளர்ச்சி பெற்றதாக மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை காணலாம்.

அடுத்ததாக பெட்ரோலியம் பற்றிய குறிப்புகள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே இருந்தன. இருப்பினும் கல்வி மூலமாக அறிவு, தொழிநுட்பத்தில் முன்னேற்றம் கண்டதால் பெட்ரோலிய வடிகட்டும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு எரிபொருளாக பயன்படுத்தலாம் என கண்டறியப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் மனிதவளம் விருத்தியடைந்து நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கு துணைபுரிகின்றது. 

சக்தி வளம் என்பது மக்களின் உணவு உற்பத்தி, வருமான அதிகரிப்பு, தொழில் பாதுகாப்பு என அனைத்திற்கும் அடிப்படையாக அமைகின்றது. இருப்பினும் இயற்கை சக்தி வளங்கள் மீதான மனிதனின் ஆதிக்கத்தால் 60 சதவீதமான பச்சை வீட்டு விளைவுகளுக்கு காரணமாகி உள்ளது. இதனால் மனித சூழலும், உயிர்ச் சூழலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே மாற்றுச் சக்தி வளம் என்பது பொருளாதார மற்றும் பூமியின் நிலைப்பிற்கு அவசியமானதாக உள்ளது. எனவே நிலைபேறான அபிவிருத்திக்கு மாற்றுச்  சக்தி தொடர்பாக சிந்திக்கத் தேவையான கல்வியறிவு அவசியமாகின்றது.

காலநிலை மாற்றங்கள் எல்லா நாடுகளின் மக்களின் வாழ்வு, பொருளாதாரம், சூழல் ஆகியவற்றை பாதித்து வருகின்றது. விருத்தியடைந்த நாடுகள் விரைவான பொருளாதார விருத்திக்காக அதிகரித்த வகையில் சூழல் வளங்களை பயன்படுத்தியமையால், சூழல் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் விருத்தியடைந்து வரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள அதிகரித்த தொழில்மயமாக்கத்தில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் மேலும் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. எனவே எல்லா நாடுகளிலும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியுள்ளது. இதற்காக அனைத்து நாடுகளும் சர்வதேச ரீதியாக ஒத்துழைப்பை வழங்க வேண்டியுள்ளது. சுற்றுச்சூழல் பற்றிய தெளிவினை மக்களிடையே வழங்க வேண்டிய தேவையுள்ளது. எனவே கல்வியினால் கிடைக்கப்பெறும்  பொருளாதார மூலதனம் மூலமே இது சாத்தியமாகும். 

முடிவுரை

நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்பது அரசியல், சமூக, பொருளாதாரம் போன்றவற்றின் ஊடாக நிகழ்காலத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல் எதிர்கால சந்ததியினரையும் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயன்முறைகளை குறிக்கின்றது. நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி என்பது மனித விழுமியங்களிலேயே தங்கியுள்ளது. 

அறிவியல் ரீதியான சிந்தனைக்கு அப்பால் விழுமியம், மனப்பாங்கு ரீதியான விமர்சன சிந்தனை, இயற்கை, பௌதீக வளங்களின் பாவனை, மனித நடத்தைக் கோலங்கள், மனப்பாங்கு விருத்தி, சமூக அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி போன்ற பல்வேறு அம்சங்களிலும் விரும்பத்தகு தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் இயற்கை வளங்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை உரிய நேரத்தில் பராமரித்தல், சூழல் மாசடையாது பாதுகாத்தல் அல்லது பிரயீடுகளை செய்தல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஒவ்வொருவரும் அதிக கரிசனை கொள்ள வேண்டும். இவை அனைத்தும் கல்வியினால் கிடைக்கப்பெறும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார மூலதனம் என்பவற்றினாலேயே சாத்தியமாகும். 

———————————————————–

இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
 
Whatsapp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.  
 
ஆரம்பப்பிரிவு  ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
 
 
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L)  குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.
 
 
 
Telegram குழுமத்தில் எம்மோடு இணைவதாயின்,
 

எம்முடைய பிற  பதிவுகளுக்கு கீழே சொடுக்கவும். (Click below for more Articles)

 
இப்பதிவு  உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். Please Share with Others ..!

Leave a Comment