இலங்கையின் கல்வி அமைப்பில் பாராளுமன்ற கல்விச் சட்டங்கள், சுற்றறிக்கைகள் என்பன கட்டுப்படுத்தும் அரசாங்க பாடசாலைகள் எனவும் ஒரு சில அரசு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு உள்நாட்டு பாடத் திட்டத்தினையும் சர்வதேச பாடத்திட்டத்தினையும் போதிக்கும் சர்வதேச பாடசாலைகள் என்ற தனியார் கல்லூரிகளும் தற்கால பாடசாலை முறைமையில் காணலாம்.
ஆரம்ப கல்வி அமைப்பில் கல்வியைப் போதிக்கும் அமைப்புகளாக,
1.குருகுலக் கல்வி
2.பிரிவேனாக்கள்
3.மிசனரிகள்
என்பன காணப்பட்டன.
குருகுல கல்வி அமைப்பில் கற்க விரும்பும் மாணவரும் கற்கத் தூண்டும் பெற்றாரும் குருவை தேடிச் சென்று குருவின் செல்வாக்கை பெற்று அவருக்கு பணிவிடை செய்து அதன் மூலமாக திருப்தி கொண்ட ஒரு ஒழுக்கத்துடன் சார்ந்த கற்பித்தலுடன் போதனைகளை மேற்கொண்டார். இங்கு கற்ற மாணவர் தொகை சிறியதாக காணப்பட்டதுடன் வித்தைகள், யுக்திகள் என்பன ஊடாக ஒழுக்க விழுமியங்கள் மாணவருக்கு கற்பிக்கப்பட்டன. குருவை தேடிச் சென்ற மாணவருக்கு மட்டும் கல்வி வாய்ப்பு கிட்டியது. கல்வி முறைமையில் பண்டைய கல்வி முறைமையில் இந்திய பாரம்பரியங்கள் காணப்பட்டன. ஆரியர்கள் இலங்கை வந்ததன் காரணமாக குருகுலக் கல்வி முறைமை ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பௌத்த சமயத்தின் வருகை காரணமாக பௌத்த கல்வி பன்சல விகாரை மூலமாக ஆரம்ப கல்வியும் பிரிவேனாக்கள் மூலம் இடைநிலை கல்வியும் , மகா விகாரை மூலமாக உயர் கல்வியும் வழங்கப்பட்டன. இக் கல்வி மூலமாக மாணவரின் நல்லொழுக்க நற்பண்புகள் வளர்க்கப்பட்டதுடன் சமய வாழ்க்கை திட்டமிட்டபடி வாழ வழி காணப்பட்டன. இதனடிப்படையில் கலாசாரப் பண்புகள் அடுத்த தலைமுறைக்கு வழிப்படுத்துவதற்கான அடித்தளம் இடப்பட்டது. இதன் மூலம் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு.அவசியமான ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் கல்வியின் மூலமாக வழங்கப்பட்டன.
சுதேச கல்வி முறைமைகள் இவ்வாறு காணப்பட்டபோது இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்த விதேசிகள் கல்வி முறைமை மிஷனரிகளால் முன்னெடுக்கப்பட்டது. தற்கால கல்வி முறைமை (கி.பி 1505-1658) ஆரம்பமாகின்றது. பின்வரும் மிஷனரி குழுக்கள் போர்த்துக்கேய காலத்தில் கல்வியில் ஆதிக்கம் செலுத்தின.
1. பிராசிஸ்கன்
2. ஜொயஜட்ஸ்
3. மொமினிக்கன்
4. ஒகஸ்டினியன்
இவ் மிஷனரிகள் பின்வரும் குறிக்கோள்களைக் கொண்டிருந்தன.
1.சுதேசிகளை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுதல்.
2.கத்தோலிக்க சமயத்தை தழுவியவர்களுக்கு ஊடாக தமது வியாபாரத்தை விருத்தி செய்தல்.
3. மதத்தின் ஊடாக பிரதேச மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளல்.
4. கத்தோலிக்க மதத்தினை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரம் எண், எழுத்து, வாசிப்பு கற்பித்தல்.
5.போர்த்துக்கேய கலாசாரத்தை தழுவிய மக்கள் குழுவினர் உருவாக்கப்பட்டனர்.
மேற்கூறிய விடயம் ஒல்லாந்தர் காலத்தில் பின்வருமாறு காணப்பட்டது.
1.புரட்டஸ்லாந்து மதம் பரப்பப்பட்டது.
2. புரட்டஸ்லாந்து தழுவியவர்களுக்கு எழுத்து எண், வாசிப்பு, கல்வி வழங்கப்பட்டது.
3.தாய்மொழி மூலம் மதம் பரப்பும் போதகர்கள், ஆசிரியர்கள் உருவாக்கப்பட்டமை.
4.அரசியலை உறுதிப்படுத்த கல்வி பிரதானமாக பயன்படுத்தப்பட்டது.
இலங்கையை ஆண்ட பிரித்தானியர் காலத்தில் கல்வி குறிக்கோளாக.
1.மிசனரிகள் ஆதரவுடன் சமயத்தினை பரப்புதல்.
2.ஆங்கில கலாசாரத்தை பரப்புதல்.
3.ஆங்கில ஆட்சிக்கு சார்பாக மக்களை திசைப்படுத்தல்.
மேற்கூறியவாறு மிஷனரிகளை கொண்டு ஆங்கிலேயர் கல்வியை இந்நாட்டில் போதித்தாலும், இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான காலப் பகுதியிலும் 1998 தொடக்கம் தற்காலம் வரை பல கல்விச் சட்டங்கள், சீர்திருத்தங்கள், பாராளுமன்ற சட்டங்கள், சிறுவர் உரிமைச் சட்டங்கள், பொதுச் சட்டங்கள் என்ற வகையில் பல மாற்றங்களை கல்வி சந்தித்துள்ளது. கற்பித்தல் முறையிலும் கற்றல் முறைமையிலும் பல வெளிநாட்டு அனுபவங்கள், கள ஆய்வுகள், முன்மாதிரிகள் என இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆசிரியர் மையக் கல்வியானது விமர்சிக்கப்பட்டு மாணவர் மைய கல்விதான் மாணவரின் ஆளுமைகளையும் திறன்களையும் வெளிக்கொணரும் என்ற முடிவுக்கு வந்து, அது தொடர்பான பல மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் கொண்டு வரப்பட்டு பாலர் பாடசாலைகளும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டன.
உலக மயமான கல்வி முறைமைகள் மிகவும் விரைவாக நாடுகளின் கல்வி முறைமைகளுக்குள் உள்வாங்க கூடியவாறு இடமளிக்கப்பட்டன. அரச தனியார் பாடசாலை கல்வி முறைமைகளுள் பல புதிய பாட விதானங்கள் புதிய பாட உள்ளடக்கம் என்பன விரைவாக புகுத்தப்பட்டன. தனியார் பாடசாலைகளும் அரச பாடசாலைகளும் உலக சந்தைக்கு, உலக கேள்விக்கு ஏற்ப மாணவர்களை தயார் படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. இதன் காரணமாக பெற்றோர்களும் பிள்ளைகளும் போட்டியான உலகில் தன் எதிர்கால பரம்பரையை வழிநடாத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்று தரமான கல்வி வினைத்திறன் மிக்க பாடசாலை என்ற வகையில் மாணவரின் பெறுபேற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோரும், பெரும் எதிர்பார்ப்பை கொண்ட அரசும் சமூகமும் பாடசாலையின் அடைவு மட்டத்திக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
பாடசாலையில் மாணவர்கள் கற்றல் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதோடு, ஆளுமை விருத்திக்கு புறக்கிருத்திய செயற்பாடுகள் / இணைப்பாடவிதான செயற்பாடுகள் அரசால் வடிவமைக்கப்பட்டு பாடசாலைகளில் அமல்படுத்த வேண்டும் என சுற்றறிக்கைகள் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பெயர் பெற்ற பாடசாலைகள் எனக் குறிப்பிடப்படும் பாடசாலைகள் அதிக பௌதீக ஆளணி வள வசதிகளை கொண்ட பாடசாலைகள் மாத்திரமே இணைப்பாடவிதான செயற்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. பெரும்பாலான பாடசாலைகளில் அரசு எதிர்பார்க்கும் பரீட்சை அடைவு மட்டத்துக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இன்று பாடசாலைகளில் மாணவர்களுக்கு உள ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தண்டனை வழங்கக் கூடாது என்பதுடன் மாணவர்களை வழிநடாத்த ஆலோசனை சேவை அலகு தாபிக்கப்பட வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி கற்ற பெற்றோர்களை கொண்ட சமூகத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், பிள்ளையின் ஒழுக்க விடயங்களிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
ஆனால் இன்று கல்வி விருத்தி பெறாத குடும்பங்களை கொண்ட சமூகங்களில் பெற்றோர் தொலைக்காட்சி, கைத்தொலைபேசி கணினி, சேட்டிலைட் போன்றவற்றின் ஆளுமைக்கு அடங்கியவர்களாக உள்ளனர். இதன் காரணமாக இவற்றின் செல்வாக்கு அக்குடும்பத்தை சார்ந்த பிள்ளைகளிடம் அதிகம் காணப்படுகின்றது. இன்று நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களின் ஒழுங்கற்ற விடயங்களில் அதிக பிரச்சினையை சந்திக்கின்றனர். குறிப்பாக,
1. மாணவர் உடை
2. மாணவர் சிகை அலங்காரம்
3. மாணவர் நடத்தை
4. மாணவர் சொற்பிரயோகம்
5. நடத்தை பிறழ்வு
6. பெரியோரை மதிக்காமை
7. கீழ்ப்படியாமை
8. காதல் தொடர்பான விடயங்கள்
9. போதைவஸ்து பாவனை
போன்ற விடயங்கள் இன்றைய பாடசாலை முறைமைக்குள் பெரும் சவாலாக உள்ளன. இவ் ஒழுக்க விழுமியப் பண்புகள் பாடசாலை கலாசாரத்திற்குள் தாக்கத்தினை செலுத்தும் பிரதான விடயங்களாக உள்ளன.
உடல் உள ரீதியாக தண்டிக்கக் கூடாது என்பது மிகவும் சிறப்பான விடயம். இவ் விடயம் அனைவராலும் அறிந்திருக்கக் கூடியதாக உள்ளது. எனினும் இவ் அம்சத்தினை தமக்கு சார்பாக மாணவர்களும் பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்வதனை காணலாம். பெரும்பாலான அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை சமூகம் என்பன தமது நேரத்தின் பெரும் பகுதியை மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த விடயங்களுக்கு செலவிட வேண்டியுள்ளன. பாடசாலை தொடர்பான சம்பவங்கள், மாணவர்கள் தொடர்பான சம்பவங்கள் பெருமளவு ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. சில சந்தர்ப்பங்களில் மாணவர்கள் உயிரிழக்கவும், ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் காரணமாக உள்ளன. இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகள் அனைத்திலும் ஒழுக்கம் தொடர்பான சட்ட திட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் போது பல பிரச்சனைகளை பாடசாலை முகாமை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே பாரம்பரிய கல்வி இலக்குகள் பாரம்பரிய கற்பித்தல் முறைமைகளில் ஏற்பட்ட மாற்றம், கல்வியின் போக்குகளில் மாற்றம் ஏற்பட காரணமாக அமைகின்றன. அத்துடன் உலக பூகோளமயமாக்கல் கல்விக்கு ஈடாக பாடசாலை முறைமை மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக இன்று பாடசாலை முறைமை உள்ளிட்ட அரசு எதிர்பார்ப்பு என்பன ஒழுக்க விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாதுள்ளன. ஒழுக்க கல்வி பாடசாலைகளில் இருந்து விலகிச் செல்லும்போக்கு காணப்படுகின்றமையால் தற்கால பாடசாலை முறைமை எதிர்காலத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
நன்றி..!